
மனித உரிமை மீறல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை
கொலையானவர்களின் உடல்கள் பரிசோதனைக்காக மீட்கப்படுகின்றன
மூதூர் தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலை உட்பட இலங்கையில் நடந்த 17 மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது விசாரணை முழுமை பெறாமலேயே தனது பணியை முடித்துக்கொண்டுள்ளது.
இந்த மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கான சாட்சிகள் பலர் இடம்பெயர்ந்து வெளிநாடு சென்று விட்டதால், அவர்களிடம் இருந்து வீடியோ மூலம் சாட்சிகளை பதிவு செய்வதில் உள்ள பிரச்சினைகளும், இலங்கையில் சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டம் அமலில் இல்லாததாலும், தம்மால் பல விசாரணைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று அந்த ஆணைக்க்ழுவின் தலைவரான முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி நிசங்க உடலகம தெரிவித்துள்ளார்.
மூதூரில் அக்சன் பெயிம் ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இலங்கை படையினருக்கு எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்பதனை விசாரணைகள் கூறுவதாக தெரிவித்த உடலகம அவர்கள், ஆயினும், அந்த சம்பவத்தில் முஸ்லிம் ஊர்காவற்படையினருக்கு சம்பந்தம் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை நகர மாணவர்கள் கொலை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை ஆகியவை தொடர்பில் சாட்சிகள் வெளிநாட்டில் இருப்பதுடன், அவர்கள் சாட்சி சொல்லத் தயாராக இருக்கின்ற போதிலும், வீடியோ மூலம் சாட்சிகளை பதிவு செய்வதில் உள்ள தடைகளால் அவற்றை பெறமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சாட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டம் இன்னமும் இலங்கை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப் படாத காரணத்தினால், அதுவும் விசாரணையை பூர்த்தி செய்யய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment